1:51 AM

பாலகுமாரன் பேசுகிறார்!




எழுத்துலகுக்கு வரவேண்டும் என்றால் நிகழ்வுகளை, சமூகத்தை உற்று கவனித்தல் என்பது மிக முக்கியமாச்சே என்று சொல்லிவிட்டு, நீங்கள் உற்று கவனித்த விஷயம் என்ன என்று கேட்டதற்கு அவரிடம் இருந்து வெளிவந்த சரளமான பதில் இது...

என்னுடைய ஊர் தஞ்சை மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளிக்கு அருகிலுள்ள பழமறநேரி. எங்கப்பாவுக்கு மருவூர். அருகில் உள்ள கிராமம்தான். இரண்டுமே மிகச் செழிப்பான கிராமங்கள். ஆனால் நான் கிராமத்தில் வளரவில்லை. இளவயதிலேயே பட்டணத்துக்கு வந்துவிட்டேன். முன்னர் சுஜாதா ஒரு வெண்பாவில் எழுதியதுபோல், நான் ராயப்பேட்டை பாலு. வசித்தது பட்டணமாயிருந்தாலும், கிராமத்து அந்தணக் குடும்பத்துக்குரிய ஆசார ஒழுக்க வகைகள் என்னிடம் இருந்தன. இந்த முரண்பாடு ஒரு குறிப்பிட்ட வயதுவரை அதிகமாக இருந்தது. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணாமல் பழகும் எல்லா இடத்திலும் அந்தண மொழியே பேசிக்கொண்டிருத்தல்....

பலர் கேலி செய்தபோதும்கூட, அதை மாற்றிக்கொள்ளமுடியாமல் தவித்தேன்.
ஒரு பொதுவான தமிழுக்கு வர எனக்கு 20 வயது பிடித்தது. இப்படி கிராமத்து நகரத்து வேறுபாடுகளுக்கிடையில் வளர்ந்துவந்த எனக்குள் இந்த முரண்பாடு அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தின. இது என்ன பெரிய விஷயம் என்று தோன்றலாம். ஆனால் மக்களை உற்று கவனிக்க இது முக்கியமாக இருந்தது. என் இள வயதில் பிராமண எதிர்ப்பு அதிகம் இருந்தது. டேய் குடுமி, பாப்பான் என்று கேலி பேசுகின்ற அந்தச் சூழ்நிலையை எதிர்கொண்டுதான் வளர்ந்தேன். இப்படிச் சொல்கிறார்களே, நாம் எப்படி நடந்துகொள்வது என்ற குழப்பம் என்னுள் இருந்தது.

இதுதான் என்னை அந்த வயதில் உற்றுப் பார்க்க வைத்தது. மற்றவர்களையும் உற்றுப் பார்க்க வைத்தது.

என்னுடைய கிராமத்தில் அந்த மாதிரியான எதிர்ப்பு இல்லாததால் எல்லோரும் ஒன்று என்ற எண்ணம் எனக்குள் இருந்தது. ஆனால் நகரத்துக்கு வந்தபின்பு அந்த எதிர்ப்புகளுக்கிடையே வாழ வேண்டியிருந்ததால், அதுவே என்னை விழிக்கச் செய்து இந்த உலகத்தைப் பார்க்க வைத்தது.

பின்னாளில் உலகத்தைப் புரிந்து கொள்ளும் பக்குவம் வந்தபோது, இந்தப் பிரிவுகள் எல்லாம் ஒரு விஷயமே இல்லை என்று எனக்குப் புரிந்தது. இந்தத் தெளிவு என்னுள் பிறந்த போது, நான் எழுதத்தொடங்கினேன். என்னுடைய அறிவுரைகள்... குழம்புங்கள். குழம்பியதுதான் தெளியும். அர்ஜுனனுக்கு பெரிய கலக்கம் வந்தது. எதிரே குருமார்கள். உறவினர்கள். சகோதரர்கள். எல்லோரையும் வெட்டி எறியவேண்டும், கொல்லவேண்டும் என்கின்ற நிலை. இது எப்படி சாத்தியம் என்று அவன் குழம்பினான். அப்போது அவனைத் தெளிவித்ததுதான் கீதை. அவனுக்கு அதில் தெளிவு அறிவுறுத்தப்பட்டது.

இது விஷாத யோகம். குழம்பியபின் அடையும் தெளிவு. என்னுடைய இளவயதில் பல்வேறு விஷயங்களால் கலங்கிய படி இருந்ததால். பெண்கள் நடத்தப் படுகின்ற விதம். ஆனால் பெண்களைப் பற்றி உயர்வாகப் பேசுகின்ற அலட்டல்...பெண்களை அடிமைகளாக முட்டாள்களாக ஆண்கள் வைத்திருப்பதும், புத்திசாலிப் பெண்கள் மருகித் தவிப்பதும் நான் நிறையப் பார்த்திருக்கிறேன். இந்தத் தாக்கமும் என்னுள் அதிகம் இருந்தது.

அதேபோல அடுத்த கட்டத்துக்கு நான் வந்தபோது, மூத்த தலைமுறையினர் காட்டிய கடும் எதிர்ப்பு... என் தந்தை பேண்ட் போட்டுக் கொண்ட போது கடுமையாக கேலி செய்திருக்கிறது. குடுமியை எடுத்துக் கொண்டபோது, கடுமையாக எச்சரித்திருக்கிறது. அதேபோல் நான் சினிமாவுக்குப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டபோது என் தந்தையார் என்னை கடுமையாக எச்சரித்தார். சினிமா ஒரு மனிதனை கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விடும்; சினிமாவுக்குப் போகக்கூடாது என்று தடுத்தார். அதனால் ஒரு வருடத்துக்கு ஒரு சினிமாவோ ரெண்டு சினிமாவோ பயந்து பயந்து பார்த்திருக்கிறேன். சினிமாவின் பரிச்சயமே இல்லாமல் இருப்பவனே உத்தமமான இளைஞன் என்ற கருத்தைக் கொண்டிருந்தவர் அவர். இன்னொரு கருத்து என் நண்பர்களிடையே இருந்தது. அதாவது, கதை புத்தகம் படித்தால் கெட்டுப் போய்விடுவார்கள் என்ற கருத்து.

பொதுவாக புத்தகமே படிக்கக்கூடாது; அப்படியே படித்தாலும் திருக்குறள் பகவத்கீதை என்றுதான் படிக்கணும். பாடப்புத்தகம் தவிர படிக்கிறதுக்கு என்ன இருக்கு என்று கேட்கிற நண்பர்கள் இருந்தார்கள். இப்படி மழுங்கிய மனிதர்கள் என்னைச் சுற்றி இருந்ததைப் பார்த்து, நம் வாழ்க்கை வீணாகிவிடக்கூடாதே என்று கவலைப்பட்டேன்.

இந்தத் தெளிவு எனக்கு என் தாயார்மூலம் பிறந்தது. அவர் என்னிடம் கதைப்புத்தகம் படி என்று சொன்னார்கள். பொன்னியின் செல்வன் வாங்கிக் கொடுத்தார்கள். காமிக்ஸ் என்ற ஆங்கில சித்திரக் கதைகள் நிறையப் படித்தேன்.அந்தப் படிப்புத்தான் என்னை உற்றுப்பார்க்க வைத்தது. கற்பனை வளர்த்தெடுக்கத் தூண்டியது. இது ஒரு சந்தோஷமான மாற்றம். தான் துணையாக இருக்க முடியாத நிலையில் எனக்குத் துணையாக புத்தகங்களை அனுப்பினார். என் தந்தையின் சொற்படி நான் சினிமா அதிகம் பார்க்கவில்லை. எம்.ஜி.ஆரா சிவாஜியா என்று நண்பர்கள் மத்தியில் பேச்சு வந்தபோது நான் சிவாஜிகட்சிதான்! இதுபோன்ற சின்னச்சின்ன விஷயங்களின் தொகுப்பாக வளர்ந்தவன் தான் இந்த பாலகுமாரன்.
--------------------------------------------------------------

இப்போது பழுத்த ஆன்மீகவாதியாகத் தோற்றமளிக்கும் உங்களுக்கு உள்ளுக்குள்ளே ஆன்மீகத் தேடல் எப்போது ஏற்பட்டது என்று கேட்ட போது அவர் சொன்ன பதில் இது...

இதே காலகட்டத்தில்தான் எனக்குள் ஆன்மிகத் தேடலும் ஏற்படத் தொடங்கியது. பத்திரிகைகள் படிக்கத் தொடங்கியிருந்தேன். மஞ்சரியில் தொடராக வந்த ரமணரின் வாழ்வும் வாக்கும் என்ற ஆன்மிகத் தொடரை தொடர்ந்து படித்து வந்தேன். அந்தத் தொகுப்புகளைத் திரட்டி வைத்தேன். ரமணரைப் பற்றி படித்தபோது எனக்குள் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டது. அந்த மாற்றம் ஒரு தேடலை எனக்குள் ஏற்படுத்தியது. தேடலின் ஆரம்பம் என்ன? வைராக்கியம். வைராக்கியம் எப்போது வரும்? ஜபம் செய்தால் வரும். ஜபத்துக்கு மூலம் எது? குரு? குருவுக்கு எங்கே போக...?

அப்போது அருகில் இருந்த கௌடியா மடத்துக்குப் போனேன். அந்த மடத்தில் சேர்ந்து ஒருமாதம் ஆகியிருந்த ஒரு பிரமசாரி ஸ்வாமியிடம் போய் எனக்கு ஜபம் செய்ய ஏதாவது மந்திர உபதேசம் செய்யுங்களேன் என்று வேண்டினேன். ராமா கிருஷ்ணா என்று சொல்லிக்கொண்டிரு என்று சொன்னார். இல்லை இல்லை எனக்கு ஏதாவது மந்திரம் சொல்லிக்கொடுங்கள் என்று கேட்டேன். அப்படியா கிருஷ்ணா கிருஷ்ணா என்று சொல்லிக்கொண்டே இந்த மடத்தில் சுற்றிச் சுற்றி வா என்றார்.

நானும் சுற்றத் தொடங்கினேன். நூறு சுற்று சுற்றிவரச் சொன்னார். நான் அவர் அங்கு எங்காவது இருந்துகொண்டு நான் சுற்றுவதை எண்ணிக் கொண்டிருப்பார் என்று நினைத்துக் கொண்டே சுற்றினேன். ஆனால் அவர் அங்கு இல்லை என்று தெரிந்தவுடன் 68 சுற்றோடு நிறுத்திக் கொண்டேன். ஆனாலும் அப்படிச் சுற்றியது என்னுள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. பிறகு அங்கே தியான ஹாலில் இருந்த கிருஷ்ணர் விக்கிரகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். கண்களில் கண்ணீர் பெருகியது.

அப்போதுதான் ஒரு விஷயத்தை எங்கிருந்து பார்க்க வேண்டும் என்ற சூட்சுமத்தைப் புரிந்துகொண்டேன். எதையும் நமக்குள் இருந்து விலகி நின்று பார்க்கக் கற்றுக் கொண்டேன். அதன் பிறகு எனக்கு நிதானம் கைவந்தது.

இந்த குணமே எனக்கு கதை எழுத மிகவும் உதவிகரமாக இருந்தது. வாழ்க்கையின் பரந்த அனுபவங்கள், அத்தோடு சிறிதளவு ஆன்மிகத் தெளிவு இவையே அதற்கு உதவியது.
-----------------------------------------------------------------

ஆன்மிகவாதியான உங்களுக்கு எப்போது இலக்கியப் பரிச்சயம் ஏற்பட்டது என்றும், இலக்கிய அமைப்புகள் எதனுடனாவது தொடர்பு கொண்டிருந்தீர்களா என்றும் கேட்டபோது, தன்னுடைய இலக்கிய ஆர்வம் துளிர்விட்ட கதையை அழகாகச் சொன்னார் பாலகுமாரன். அது...

கசடதபற என்ற இலக்கிய வட்டத்துக்கு ஒருநாள் யதேச்சையாகப் போனேன். நா.முத்துசாமி என்ற கூத்துப் பட்டறை நண்பர் எனக்கு கசடதபற நண்பர்களை அறிமுகம் செய்து வைத்தார். நாங்கள் இருவரும் ஒரே டிராக்டர் கம்பெனியில் வேலை பார்த்தோம். அவர் அக்கவுண்ட்ஸ், நான் பர்ச்சேஸ். முத்துசாமியின் மூலம், ஞானக்கூத்தன், சா.கந்தசாமி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் பரிச்சயம் கிடைத்தது. இவர்கள் மெத்தப் படித்தவர்கள். ஆங்கில இலக்கியம் தெரிந்தவர்கள். தமிழில் எழுத வேண்டுமென்றால் ஆங்கில இலக்கியப் பரிச்சயம் வேண்டும் என்பது ஒரு சாராரின் கருத்தாக இருந்தது. இன்னொரு சாரார் தமிழில் எழுத வேண்டுமென்றால், பழந்தமிழ் இலக்கியங்களில் பழக்கம் இருக்க வேண்டும் என்ற கருத்து கொண்டிருந்தனர். இந்த இரண்டு கருத்துக்களுமே எனக்கு மிகுந்த உவப்பைத் தந்தன. ஆக, அந்த இளம் வயதில் எனக்கு ஆங்கில இலக்கியமும் பழந்தமிழ் இலக்கியமும் பழக்கமாகின.
ஹொரீஷியஸ் லீடர்.. நன்றாகப் படித்தேன். தடி தடியாகப் புத்தகங்கள் இருந்தன. ஹக்ஸ்லி, ஐண்ட் ராண்ட், கூந்தர் க்ராஸ் என்று நிறையப் படித்தேன். என் தாயார் தமிழ்ப் பண்டிதராக இருந்ததால், வீட்டில் நிறையப் புத்தகங்கள் இருந்தன... என் தாயார் நிறையச் சொல்லித்தந்தார்கள். சுலோசனா என்று பெயர். பள்ளியில் பணியிலிருந்தார். யாப்பு சொல்லிக் கொடுத்தார். அதைத் தொடர்ந்து மரபுக் கவிதைகள் முதலில் எழுதிப் பழகினேன். எதுகை மோனையும் சப்த ஒழுங்கும் அமைந்த கவிதைகள் புனைந்தேன். ஞானக்கூத்தன் முத்துசாமி போன்றவர்கள் உற்சாகப் படுத்தினார்கள். நான் நிறையப் படிப்பதற்கு அவர்கள் காரணமாக இருந்தார்கள்.

லாயிட்ஸ் ரோடில் ஈஸ்வரி லெண்டிங் லைப்ரரி வைத்திருந்த பழனி என்பவர் இருந்தார். அவரிடம் எல்லா புத்தகங்களும் இருந்தன. ஒரு புத்தகத்துக்கு ரெண்டு அணா. அவ்வளவு ரெண்டணா என்னிடம் இல்லை என்பதால், பல புத்தகங்களை இந்தா சீக்கிரம் படிச்சிட்டுக் கொடு என்று புத்தகங்கள் நிறையக் கொடுத்தார். அவர் கொடுக்கும் புத்தகங்கள் நன்றாகவே இருக்கும். காசு இல்லாமல் அவருடைய லெண்டிங் லைப்ரரியில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட புத்தகங்களை நான் படித்திருக்கிறேன்.

கசடதபற மற்றும் நண்பர்கள் கொடுக்கும் புத்தகங்கள், ஈஸ்வரி லெண்டிங் லைப்ரரி என்ற இந்த வட்டத்துக்குள்ளேயே என் புத்தக வாசிப்பு வட்டம் அமைந்துவிட்டது. பல ஆங்கிலப் புத்தகங்கள் அங்கு மட்டும்தான் கிடைக்கும் என்ற அளவுக்கு சேர்த்து வைத்திருந்தார். உதாரணத்துக்கு ஜேம்ஸ் ஹால்டிசேஸ் புத்தகம். அது வேறு எங்கும் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். அந்தப் புத்தகத்தைப் படித்தால் ஆங்கிலம் சரளமாக வந்துவிடும். காரணம் அதில் நிறையப் பொதிந்துள்ள டயலாக்ஸ்... அதனால் ஆங்கில பேச்சுத்திறனும் வளரும் என்பது அந்தப் புத்தகங்களின் பலம். என்ன பேசுகிறார், என்ன கேட்கிறார் என்று புரிந்துவிடும். ஆங்கில வொக்கப்லரி அருமையாக அமைந்துவிடும்.

அலுவலகச் சூழல், இதுபோன்ற புத்தகங்களின் துணை போன்றவற்றால் என் ஆங்கில அறிவு நன்கு வளர்ந்தது. இப்படி முதலில் கவிதை பழகி, அதன் பின் கவிதையிலிருந்து உரைநடைக்குத் தாவினேன். அதனால் உரைநடை நன்கு கைவந்தது..
------------------------------------------------------------------

அப்பாடா... எல்லோரையும்போல நீங்களும் கவிதைக்குத்தான் வந்தீர்களா? அப்படியிருந்தும் நீங்கள் ஏன் கவிதையைக் கைவிட்டீர்கள்? என்று கேட்டதற்கு அவரிடமிருந்த வந்த பதில் இதுதான்...

இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடந்தது. அந்த சமயங்களில் கதை, கவிதைகளுக்கு நல்ல மதிப்பும் வரவேற்பும் இருந்தது. ஆனால் முன்னர் கவிதைகளுக்கும் கவிஞர்களுக்கும் அவ்வளவாக மதிப்பும் இருந்ததில்லை; புறக்கணித்தலும் தொடர்ந்தது. அதற்கு முன்னர் எல்லாவற்றிலும் ஆங்கிலமே கோலோச்சியது. ஒரு கடிதம் எழுதினால்கூட, நமஸ்காரம் ஹவ் ஆர் யு? என்றுதான் கடிதம் தொடரும். ஆங்கிலம் அறிந்திருத்தலே அறிவு என்று கருதப்பட்ட காலம் ...

இப்படிப்பட்ட கும்பல் சூழ்ந்திருந்த நிலையில் இருந்து சற்றே விலகி, தமிழில் எழுத ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் அது அவ்வளவாகப் பாராட்டப்படவில்லை... பின்னாளில் நான் அதிகம் எழுதியபோது என்னை கவனிக்கத் தொடங்கினார்கள். கசடதபற-தான் முதல் கதைக்கு கை கொடுத்தது. அதன் பின் கதைகள் எழுத பயிற்சி மேற்கொண்டு நிறைய கதைகள் எழுதத் தொடங்கியிருந்தபோதுதான், குமுதம் நிருபராக இருந்த பால்யூவின் அறிமுகம் கிடைத்தது.

அந்த நிலையில் குமுதம் பால்யூவின் நட்பு இல்லையென்றால் நான் தொடர்ந்து எழுதியிருப்பேனா என்பது சந்தேகமே! குமுதத்தில் கதை எழுதணுமே என்று எண்ணியபோது, பால்யூதான் பாலமாக இருந்தார். எப்படி எழுதுவது என்று யோசித்தபோது, உனக்கு என்ன வருமோ அதைச் செய், அவர்களுக்குப் பிடித்திருந்தால் நிச்சயம் வரும்... என்ன வாசகர்களுக்கும் புரிகிற மாதிரி எழுதணும்; அதைத்தானே அவர்களும் எதிர்பார்ப்பார்கள் என்று கூறி என்னை உசுப்பேற்றினார்.

ஒரு விஜயதசமி நாளில் என்னயும் நண்பர் சுப்பிரமணிய ராஜுவையும் குமுதத்துக்கு அழைத்தார். எஸ்.ஏ.பி எங்கள் இருவரையும் பார்த்துவிட்டு, ரா.கி.ரங்கராஜனிடம் இவர்கள் இருவரும் கெட்டிக்காரர்கள் என்று சின்முத்திரை காட்டிச் சொன்னார். அது பெரிய விஷயம் என்று பின்னர் பால்யூ என்னிடம் சொன்னார். அதன்பிறகு குமுதத்தில் கதைகள் எழுதினேன். அது ஒரு மகத்தான ஆரம்பம் எனக்கு. கெட்டாலும் ஆண்மக்கள் என்ற கதை எழுதினேன். நல்ல வரவேற்பு இருந்தது. நடை நன்றாக இருக்கிறதே என்று அப்போது இருந்த எழுத்தாளர்கள் சொன்னதாகவும் கேள்விப்பட்டேன். அது என் நான்காவது கதை என்றாலும் அதிகம் பேர் என்னை கவனிக்க வைத்த கதை.
---------------------------------------------------

உங்களுடைய முதல் நூல் எது என்று நினைவிருக்கிறதா? அந்த நூல் வெளியான போது உங்கள் உணர்வு எப்படியிருந்தது என்று கேட்டபோது அவருடைய சிறுகதைத் தொகுப்பு நூல்தான் முதல் நூல் என்று சொல்லி சிலவற்றைச் சொன்னார், இப்படி...

சிறுகதைத் தொகுப்பு நூல்தான்! சின்னச்சின்ன வட்டங்கள்-. அதை நர்மதா பதிப்பகம் தொகுத்து வெளியிட்டது. அதன்பிறகு குங்குமத்தில் சாவி ஆசிரியராக இருந்தபோது, அதில் ஒரு குறுநாவல் எழுதச் சொன்னார். நன்றாக வந்தது. அந்த நேரம் குங்குமத்திலிருந்து, சாவி என்கின்ற புதிய பத்திரிகையைத் தொடங்கினார். ஒரு புதிய பத்திரிகை, புதிய சூழல் என்று நானும் அவருடனேயே சென்றேன். அவர் சாவி பத்திரிகையை முதலில் கல்கண்டு போல் செய்திகளின் தொகுப்பாகக் கொண்டுவரவே எண்ணினார். ஆனால் பிறகு, அதில் சிறுகதை, கவிதை, பேட்டி என்று இடம்பெறச் செய்ய எண்ணினார். என்னையும் முதலில் நேர்காணல்கள் எடுத்துத் தரவே பணித்தார். நானும் பேட்டிகள் எடுத்து எழுதத் தொடங்கினேன்.
-----------------------------------------------------------

பேட்டிகள் எடுத்தேன் என்று சொன்னவுடனே உங்களுக்கு நன்கு நினைவில் இருக்கும் பேட்டி என்று கேட்டேன். ஆனால் அவருடைய பேட்டி, ஒரு நேரடிப் பேட்டியாக அமையாமல் ஒரு பேட்டிக் கட்டுரையாக அமைந்திருக்கிறது. அதை அவர் சொன்னபோது, மகிழ்வும் துக்கமும் ஒருசேர இருந்ததை உணரமுடிந்தது. காரணம் என்ன என்பதை அவருடைய வார்த்தையிலேயே நீங்கள் பார்த்தால் தெரியும்...

நன்றாக நினைவிருக்கிறது... நடிகை ஷோபா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சமயம். பால்யூவின் மகன் உடனே போன் செய்து, அந்தத் தகவலை என்னிடம் சொன்னார். நானும் ராணிமைந்தனும் அங்குப் போனோம். போலீஸ் வரும் முன்னே அங்குப் போய் பார்த்தேன். அவர் அம்மா மிகவும் அழுதார்கள். அவர்களிடம் பேசினோம். என் பொண்ணு போயல்லோ; என் ஜீவன் போயல்லோ என்று அரற்றினார்கள். அதையே தலைப்பாக வைத்து ஒரு கட்டுரையை எழுதினேன். அது அப்போது மிகப் பரபரப்பாகப் பேசப்பட்டது.
-----------------------------------------------------

இந்த நிலையில் பாலகுமாரன் என்ற பத்திரிகையாளன் சிறப்பாக ஜொலித்திருக்க முடியும். ஆனால் தனக்குள் மறைந்திருந்த எழுத்தாளனை விழிக்க விட்டு, பத்திரிகையாளனை அவர் மீளாத் தூக்கத்தில் ஆழ்த்தி விட்டார் என்பதை அவர் சொன்ன விதம் இப்படித்தான்...

பேட்டிகள் எடுத்துக் கொண்டிருந்தபோது, அது எனக்கு திருப்தி தரவில்லை. எனக்கு பத்திரிகையாளனாக வேண்டும் என்ற ஆசை துளிக்கூட இல்லாதிருந்தது. எனக்குள் இருந்த எழுத்தாளன் அவ்வப்போது கொம்பு சீவிக்கொண்டிருந்தான். சாவியில் மாலனும் சுப்பிரமணிய ராஜுவும் இருந்தார்கள். மாலனுக்கு பத்திரிகையாளனாக ஆசை இருந்தது. ஒருமுறை எம்.ஜி.ஆரோடு நேர்காணல் எடுக்க ஒரு வாய்ப்பு வந்தது. என்னை அவர்கள் அழைத்தார்கள். ஆனால் நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அவர்கள் ஆச்சரியப்பட்டனர். இப்படியே போய்க்கொண்டிருந்தால் என்னை பத்திரிகைப் பணியிலேயே முழுவதுமாக இருத்திவிடுவீர்கள்; எனக்கு எழுத்தாளனாகவேண்டும் என்ற விருப்பம்தான் உள்ளது என்று சொல்லி அதைத் தவிர்த்துவிட்டேன்.

நான் கதை எழுத ஆயத்தமாக இருந்தேன். சிம்ப்ஸன் நிறுவனத்தில் பணி செய்தபோது, ஆளும் தி.மு.க அரசை எதிர்த்து அப்போது ஒரு வேலை நிறுத்தம் நடந்தது. கம்யூனிஸ்டுகளின் அந்தப் போராட்டம் மோசமான முறையில் எதிர்கொள்ளப் பட்டது. எனக்கும் அது மோசமான அனுபவமாகவே இருந்தது. சிறை அனுபவமும் இருந்தது. இதை மனதில் வைத்து மெர்க்குரிப் பூக்கள் என்று ஒரு நாவல் எழுதினேன்.

அந்த நாவலை எழுதிக் கொண்டிருந்தபோது, சாவி என்னை அழைத்து எழுதுங்கள்; நன்றாக வந்தால் தொடர்ந்து போடுவேன், இல்லை என்றால் ஐந்தாவது வாரத்திலேயே நிறுத்தி விடுவேன் என்றார். அதனால் திரும்பத்திரும்ப பார்த்துப் பார்த்து எழுதினேன். அது நன்றாகவே வந்தது. நீயே படம் வாங்கிக் கொடு என்றார். அதனால் அதை எடுத்துக் கொண்டு மணியம் செல்வனிடம் ஓடுவேன். இந்த இடத்துக்கெல்லாம் பஸ்ஸில் செல்வேன். சைக்கிளும் பஸ்ஸும்தான் அப்போதைய துணை. ஆனால் பஸ்ஸை விட சைக்கிளே எனக்கு துணையாக இருந்தது. ஒரு நாளுக்கு நான்கு மணிநேர தூக்கமே இருக்கும். இளம் வயதில் வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் வேலை வேலை என்று இருப்பேன். அலுவலகம் என் வயிற்றுக்காக! இலக்கியம் என் வாழ்வுக்காக என்று தெளிவாக இருந்தேன். இந்த இரண்டையும் விடவில்லை. சனி ஞாயிறுகளில் எல்லோரும் ஓய்வாக இருக்கும் போது நான் இதற்காக ஓடிக்கொண்டிருப்பேன்.
-------------------------------------------

உங்களுடைய பிரபலமான தொடர்கள் என்ன என்றுகேட்டபோது அவருடைய பழைய நினைவுகளை இப்படி வெளிப்படுத்தினார்...

விகடனின் ஒரு முறை தனிப் புத்தகமாகப் போடுவதற்கு வாய்ப்பு அமைந்தது. மூன்று பெண்களைப் பற்றிய நாவலாக அது அமைந்தது. அந்த மாதிரியான ஒரு திறப்பு விகடனில் அமைந்தது. அதன் பிறகு எழுதுவது எனக்கு வெறியாகப் போனது. விகடனில் வந்தபிறகு நாம் ஒரு சாதாரண எழுத்தாளன் இல்லை; மிகப் பெரிய எழுத்தாளன் என்று எனக்குள் ஒரு கர்வம் ஏற்பட்டது. ஆனால் அதை எங்கும் வெளிப்படுத்தியதில்லை; எனக்குள்ளேயே வைத்துக் கொண்டேன்.

அதன் பிறகு இரும்புக் குதிரைகள் \ கல்கியில் வந்தது. தாயுமானவன்; ஆனந்த வயல் போன்றவை பிறகு விகடனில் வந்தது. மீண்டும் குமுதத்தில் ஒரு தொடர்கதை... இப்படி ஒரு கட்டத்தில் ஏழு நாட்களிலும் ஏழு பத்திரிகைகளில் என் தொடர் வந்தது. எதில் திருப்பினாலும் என் படைப்புகள். ஒரு சமயத்தில், தீபாவளி மலர்கள் எல்லாவற்றிலும் என் படைப்புகள் இடம்பெற்றன. விகடனில் ஒரு படி கூடுதலாக, பேனர்கள் வைத்து நன்றாக விளம்பரப்படுத்தி உற்சாகப் படுத்தினார்கள். இப்படிப்பட்ட சந்தோஷங்கள் ஒரு எழுத்தாளனுக்குக் கிடைக்க வேண்டும், அது எனக்கு நன்றாகவே கிடைத்தது. அதை நன்கு அனுபவித்தேன்.

இந்த நேரத்தில் என்னால் டிராக்டர் கம்பெனியில் தொடர்ந்து பணியில் இருக்க முடியவில்லை. முழுநேர எழுத்தாளனாக விரும்பினேன். அதனால் கம்பெனியின் சேர்மென் சிவசைலம் அவர்களிடம் போய், நான் வேலையை விட்டுவிட்டு எழுத்துலகத்துக்குப் போகப்போகிறேன். அப்படி அங்கு ஜெயிக்க முடியாமல் போனால் மீண்டும் எனக்கு ஏதாவது ஒரு வேலை போட்டுத் தரவேண்டும் என்று கேட்டேன். அவரோ, நீ இங்குத் திரும்பி வரமாட்டாய்; எங்கோ உயரத்துக்குப் போகப் போகிறாய். நன்றாக வருவாய் என்று ஆசியளித்து அனுப்பிவைத்தார்.

பத்திரிகையில் சேர்ந்தால் வெளியில் எழுத விடமாட்டார்கள். நேரமும் இருக்காது என்பதால், வெறுமனே வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டேன். அதற்கு மிக முக்கியக் காரணம் என் இரு மனைவிகள். அவர்கள் இருவரும் அரசுப்பணியில் இருந்தார்கள். அவர்களது வருமானம் போதும் என்று தெரிந்தது. எனவே அவர்கள் என்னைப் பார்த்துக் கொண்டார்கள். நான் சந்தோஷமாக அமர்ந்து கதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். எந்தக் கவலையும் இல்லாமல், எனக்குப் பிடித்த நேரத்தில், எனக்குப் பிடித்த விஷயத்தை எனக்குப் பிடித்த வகையில் எழுத எனக்கு வாய்ப்பு அந்த நடுத்தர வயதில் கிடைத்தது. அது ஒருவகையில் கொடுப்பினைதான்!
------------------------------------------------

எழுத்தாளனாக உங்களுடைய பயணம் நன்றாக அமைந்திருந்தது. அதுபோல் சினிமாத்துறையிலும் ஒரு எழுத்தாளனாக நுழைந்து உங்களுடைய ஆதிக்கத்தைச் செலுத்தினீர்களே... அந்த அனுபவம் எப்படி இருந்தது என்று கேட்டபோது, தனக்கு அச்சு ஊடகங்களில் கிடைத்த செல்வாக்கும் திருப்தியும் வெள்ளித்திரையில் கிடைக்கவில்லை என்பதை வருத்தத்தோடு சொன்னதாகத்தான் நான் உணர்ந்தேன். அவர் சொன்னதைப் படித்தால் உங்களுக்கும் அதுபோன்ற எண்ணம் தோன்றலாம். அவர் சொன்னது இதுதான்...


நன்றாக எழுதிக்கொண்டிருந்த அந்த நேரத்தில்தான் சினிமாவுக்குள் போக வேண்டும் என்ற ஆர்வம் துளிர்விட்டது. இன்றைய நிலையில் பாரதியாக இருந்தாலும் குறைந்தபட்சம் கவிதை எழுதவாவது சினிமாவுக்குள் பிரவேசித்திருப்பார். எனக்கு ஆசை வந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. இயக்குனராக ஆசை இருந்தது. சினிமாத்துறை என்பது நிர்வாகம் சேர்ந்தது. எழுத்தாளன் வெகுளித்தனமானவன்.

ஆனால் சினிமாவுக்கு நிர்வாகத் திறனும் தேவை என்பதால் என்னால் அதன் வேகத்துக்கு, அதன் தன்மைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. ஆனால் என்னை சினிமாத்துறை நன்றாகவே வைத்திருந்தது. பாலசந்தரிடம் போய்ச் சேர்ந்தேன். இருந்தபோதும் அத்துறை எனக்கு தெளிவில்லாமலே இருந்தது. சினிமா ஒரு கலைத்துறை என்று கலைக்கண்ணோட்டத்தோடு போகிறவன் விழிபிதுங்கிவிடுவான். சினிமா ஒரு பக்கா வியாபாரம். இதைப் புரிந்துகொள்ள வேண்டும். சினிமாவுக்கு ஒரு ஆடிட்டர், எம்.பி.ஏ, ஒரு நிர்வாகிதான் தேவை. அதோடு கொஞ்சம் கலை ஆர்வமும்வேண்டும். எனக்கு பலரும் சொன்னார்கள். ஆனால் அது சரியாக என் மூளையில் பதியவில்லை. என்னிடம் ஒரு எழுத்தாளனுக்குரிய வெகுளித்தனமே இருந்ததால் என்னால் அதில் பெரிதாக வெற்றி பெறமுடியவில்லை.
---------------------------------------------------

சினிமாவைப் பற்றி அவருடைய கருத்து இப்படிப் போய்க்கொண்டிருந்ததால், அவரிடம் சினிமாவுக்கும் கதை எழுதுவதற்கும் பெரிதாக என்ன வித்தியாசம் இருக்கிறது என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன விளக்கங்கள், எழுத்துத் துறையில் இருக்கும் அனைவருக்கும் ஒரு டிப்ஸ் போல அமைந்திருந்தது. அவர் சொன்ன விளக்கங்கள் இவைதான்...

சினிமாவுக்கு செய்திகளும் அலங்கார விவரணைகளும் தேவையில்லை. ஆனால் கதைக்கு இது தேவை. என்ன சொல்லப்போகிறோம் என்பதை விட எப்படி சொல்லப்போகிறோம் என்பதுதான் முக்கியம். ஆனால் கதையில், என்ன சொல்கிறோம் என்பதுதான் முக்கியம். மேட்டர் இல்லை என்றால் கதை வெற்றிபெறாது. சினிமா விஷுவல் என்பதால், ஒருவன் சொல்வதை ஓடி வந்து சொல்கிறனா, நடந்து வந்து சொல்கிறானா, உருண்டு வந்து சொல்கிறானா என்பதை எல்லாம் காட்சிகளில் காட்டியாக வேண்டும்.

அம்மா நான் பாஸாயிட்டேன் என்று எம்.ஜி.ஆர் சொல்கிறார். அதில் இந்த வசனம் முக்கியம் இல்லை. எம்.ஜி.ஆர் எப்படி வந்து சொல்கிறார் என்பதுதான் முக்கியம். கையில் ஒரு பேப்பரை வைத்துக்கொண்டு திபுதிபுன்னு ஓடிவந்து வசனத்தைச் சொல்லி, அப்படியே அம்மாவை கட்டிக்கொண்டு ஒரு சுற்று சுற்றி மீண்டும் மூச்சு வாங்க அம்மா நான் பாஸாயிட்டேன் என்று காட்சியில் ஒரு விறுவிறுப்பை எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடலாம். ஆனால் இந்த அனுபவத்தை கதையில் கொடுக்க முடியாது. கதையில் வேகமாக நகர்த்தணும். அதனால் வர்ணனைகளைத் தவிர்த்துவிடுவேன். சினிமாவில் உணர்ச்சிக் கொந்தளிப்பு இருக்கவேண்டும். கதையில் அதை வார்த்தையில் கொடுத்துவிடலாம். சினிமாவில் அதன் பிறகு அம்மா திருஷ்டி கழித்துப் போடுகிறேன் என்று சொல்லி, உணர்ச்சியின் விளிம்புக்கு எடுத்துச் சென்று நிகழ்வைக் காட்டும்போது பார்க்கும் ரசிகன் ஒவ்வொருவனுடைய முகத்திலும் சிரிப்பும் மகிழ்வும் தாண்டவாமாடும். ஆனால் படிக்கும் வாசகன் இதை தனக்குள் அனுபவித்துக் கொள்ளவேண்டும்.

சீதா லட்சுமி அழகாக இருந்தாள். இந்த ஒரு வார்த்தை எழுதினால் போதும். ஊரே அவளைக் கண்டு வியந்தது. இது எக்ஸ்ட்ரா. பக்கத்துவீட்டு பாலு அவளை விரும்பினான். அவ்வளவுதான் இதோடு முடிந்து போகும். இனிமே சீதாலட்சுமி என்ன செய்கிறாள், பாலு என்ன பண்ணுகிறான் என்பதெல்லாம் கதையில் போய்க்கொண்டிருக்கும். ஆனால் சினிமாவில் காட்டும்போது, அந்த சீதாலட்சுமி அழகாக இல்லை என்று ரசிகன் மனதுக்குத் தோன்றினால்... போயும்போயும் இதப் போய் அழகுங்கிறானே... என்று சொல்லிவிட்டுச் சென்றுவிடுவான். எழுத்தில் அந்த நிலை இல்லை. எழுத்து வாசகனுக்கு கற்பனையை ஏற்படுத்தும். சினிமாவுக்குள் நான் இருந்தபோது அதை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. அதைப் புரிந்து கொண்டபோது எனக்கு வயதாகிவிட்டது.
----------------------------------------------

உங்களுடைய நாவல் அனுபவம் எப்படி அமைந்தது என்று கேட்ட போது, அவருடைய பதில் இப்படி இருந்தது...

யோகி ராம்சுரத் குமார் நட்பு கிடைத்தது. கடவுள் தரிசன அனுபவம் அது. அவர் எழுத்தின் ஆரம்பப் புள்ளியை அணுகும் அனுபவத்தைத் தந்தார். அதன் பிறகு கவித்துவ நடையோடு எழுத்து அமைந்தது. சரித்திரம் பக்கம் பார்வை சென்றது. சரித்திர நாவல் எழுதவேண்டும் என்பதற்காக அது தொடர்புடைய இடங்களுக்குச் சென்று அவற்றோடு ஒட்டி உறவாடி, அந்த அனுபவத்தை கற்பனையில் கொண்டுவந்து எழுத்தில் வடித்தேன். அதற்காக குதிரையேற்றம் கூடக் கற்றுக் கொண்டேன். சரித்திரக் கதைக்காக குதிரையேற்றம் கற்றுக் கொண்டது நான் ஒருவன்தான் என்று நினைக்கிறேன். இப்படி கதைக்குத் தொடர்பானவைகளை நேரில் கண்டு அதன் வர்ணனைகளோடு எழுத ஆர்வம் பிறந்து.

அதன் ஒரு வெளிப்பாடாகத்தான், பயணிகள் கவனிக்கவும் என்று விகடனில் எழுதினேன். விமான நிலையத்துக்குச் சென்று, அங்கு நடப்பவைகளை துல்லியமாகக் கவனித்து எழுதினேன். அடுத்தடுத்து பல நாவல்கள் இந்த அனுபவத்தைக் கொடுத்தன.

கல்திரை நாவல் எழுதும்போது, அந்த நாவலின் மையக்கருத்துக்கான கல்வெட்டு கிடைத்தது. தொல்பொருள்துறையைச் சேர்ந்த நண்பர்கள் உதவினார்கள். சரித்திரக் கதை எழுதும்போது, பெரும்பாலும் தொல்பொருள் வல்லுனர்களை பலரும் மறந்துவிடுவார்கள். ஆனால் நான் உடையார் நாவல் எழுதியபோது, அவர்களுக்கு மறக்காமல் நன்றி தெரிவித்திருக்கிறேன்.
----------------------------------------------------

உங்களுடைய எதிர்கால எழுத்துலக ஆசைகள் என்ன என்று கேட்டபோது கனத்த மனத்துடன் சிலவற்றைச் சொன்னார்....

லைப் ஆப்டர் டெத்... அதாவது மனிதன் இறந்த பிறகு அவன் வாழ்க்கை என்ன என்பதைப் பற்றி எழுத ஆசை. தமிழில் அது எழுதப்படாத நாவலாக இருக்கும். அது வெறும் ஆவி உலகம் தொடர்பானதல்ல...

வெற்றியடைவதற்கு மூச்சுப் பயிற்சி தியானம் கடவுள் நம்பிக்கை போன்றவை தொடர்பான ஒழுக்க விதிகளை வைத்து ஒரு நூல் எழுத ஆசை.

யோகிராம் சுரத் குமாரின் வாழ்க்கைப் பதிவுகளை எழுத ஆசை.

அதற்கு பிறகு ஒன்றும் எழுத மாட்டேன் என்று நினைக்கிறேன்.

237 நாவல்கள், படைப்புகள் இதுவரை எழுதியாயிற்று. 62 வயது. இரண்டு மனைவிகளோடு அறுபதாம் கல்யாணம் நிறைவாக நடைபெற்றது. ஒரு மகள். அவளுக்குத் திருமணமாகி இப்போ எனக்கு ஒரு பேரன் இருக்கிறான். மகன் நல்ல வேலையில் இருக்கிறான். அவனுக்கு திருமணம் செய்துவைக்கவேண்டும். ஒரு எழுத்தாளனாக வாழ்ந்து நான் ஜெயித்திருக்கிறேன். ஏன் எழுத வந்தோம் என்று இதுவரை எண்ணியதில்லை.

நன்றி.
-------------------------------------------------

நமது தளத்தில் இந்த பதிவை வெளியிட அனுமதித்த திரு. ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி (http://senkottaisriram.blogspot.com/2009/04/interview-with-writer-balakumaran.html)

2 comments:

bala said...

Sri Ram sir,
Very very thanks. I already read lot of books of him. I have also doubts like this. But you have the chance to get like this interviews. Once again thank you very much sir.

வாளவாடி வண்ண நிலவன் said...

nala patti nantri