11:09 PM

பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி 7

எல்லா ஊர்களிலும் எல்லா மொழிகளிலும் வசவுகள் உடலுறவு சம்மந்தமாகவும், புணர்ச்சி சம்மந்தமாகவும் இருக்கின்றன. போகத்தை மறைமுகமாகச் சுட்டிக் காட்டுபவையாகவே இருக்கின்றன. உடலுறவு மனித ஆங்காரத்தின் விஷயமாகப் போயிற்று. மன ஆங்காரத்தை வெளிப்படுத்த உடல் ஆங்காரத்தின் விஷயம் முக்கியமாயிற்று. ஒருவனை கடன்காரன் என்றோ, கொலைகாரன் என்றோ திருடன் என்றோ பொய்யன் என்றோ சொல்லுவதால் ஏற்ப்படும் கோபத்தை விட, அவனை இயலாதவன் என்று சுட்டிக்காட்டுகிறபோது கோபம் ரௌத்திரமாக மாறுகிறது.
புணர்ச்சி முக்கியமாக இருந்தது. அதே சமயத்தில் இழிவாகவும் கருதப்பட்டது. முக்கிய மனதை இழிவுபடுத்த மூர்க்கம் பிறந்தது. ஜனங்கள் புணர்ச்சி கலந்த வசவைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்களைப் போனார்கள்.
-கனவுகள் விற்பவன் 2.


ஒரு வினையின் தொடர்ச்சி இன்னொரு வினையை ஏற்படுத்தாமல் முடிவதில்லை.வினை தொடராமல் இருக்க இறைவழிபாடு மட்டுமே உதவி செய்யும்.
-கோச்செங்கண்ணனார்,கதை கதையாம் காரணமாம்.


எதைப் பற்றியும் அக்கறை கொள்ளாது இறை நினைப்பாக இருப்பதே மிக உயர்வு. எதிரியென்று யாரும் இல்லை என்று இருப்பதே மனித வாழ்க்கையின் சிறப்பு. இந்த மனவிசாரம்தான் இடையறாத சந்தோஷம்.கடவுளைத் தெரிந்ததன் அடையாளம். இறை தெரிந்து இறையாகி நிற்கும் மாண்பு.
-அம்பரீஷன், கதை கதையாம் காரணமாம்.


உலகத்தில் எல்லா முயற்சியும் யுத்தம்தான். வெற்றியில் விருப்பமெனில் வலி தாங்கு.புழுங்கிச்சாவதை விட போரிட்டு மடிவது உத்தமம்.வெறும் கனவுப் படுக்கையில் நோயுற்றுச் சாவதைவிட யுத்த நினைவுகளான அம்புப்படுக்கையில் பீஷ்மநென மடிவது மேல். இவ்விதி புரிந்தவருக்கு போர் எளிது. வாழ்க்கையும் ருசிக்கும்.
-இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா!


வைராக்கியம் என்பது கூரிய கத்தி.உறுதியான ஆயுதம். ஒரு போர்வீரன் அதை இடுப்பில் வைத்திருக்க வேண்டும்.போர்வீரனுக்கு தன் கத்தியின் மீதுள்ள மரியாதையும், பெண்ணுக்கு தன் கற்பின் மீதுள்ள மரியாதையும், வணிகனுக்கு தன் செல்வத்தின் மீதுள்ள மரியாதையும் போல நல்லோருக்கு வைராக்கியத்தின் மீது மரியாதை வரவேண்டும். இதை இழக்க முடியாது என்று இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும்.
-அஜாமிளன், கதை கதையாம் காரணமாம்.


நாம் கர்வப்படாதது மட்டுமல்லாமல் கர்விகளின் தொடர்பும் இல்லாமல் இருப்பது உத்தமம்.
-கடலோரக்குருவிகள்.


நல்ல சகவாசத்தால் நல்ல குணங்கள் உறுதிபடுகின்றன. நல்ல குணங்கள் உறுதிபட்டால் ஆசையில் இருந்து விலகி வர முடிகிறது. ஆசைகள் விலக மனது மிகுந்த அமைதி உடையதாகிறது.மிகுந்த அமைதியே வீடுபேறு. வீடுபேறு என்கிற உயர்வான எண்ணமே எல்லா மனிதனுடைய ஆசை.அடிமனதில் இருக்கும் ஆசை.
-கடலோரக்குருவிகள்.


தன் வெற்றிக்கு தானே காரணம் என்று நினைப்பவன் கர்வி. தன்னுள் பொங்கிப் பூத்திருப்பது கடவுள் என்கிற மனோசக்தி என்று நினைப்பவன் ஞானி.
-கடலோரக்குருவிகள்.


நன்கு ஒருமைய்ப்பட்டவருக்குக் கோபமோ, ஆத்திரமோ, பொறாமையோ இருக்காது. மாறாய் அம்மாதிரி உணர்ச்சிகள் எழும்போது அவற்றை மெல்லப் பிரித்து ஒதுக்கிவிட்டு, எதனால் இவை ஏற்படுகின்றன என்று ஆராயும் மனப்பக்குவமும் வந்து, அது ஏற்படாதிருக்க என்ன செய்யவேண்டும் என்ற யோசனையும் ஏற்பட்டு, அதைச் செயல்படுத்தக்கூடிய திறமையும் அவர்களுக்கு வந்துவிடும்.
-விரத மகிமை,எனது ஆன்மீக அனுபவங்கள்.


அன்பு செய்வதால் மலர்ந்த பெண்ணுக்கு அன்பு காட்ட மட்டுமே தெரியும்.அன்பு ஒரு மிகப்பெரிய சக்தி.கலப்பே இல்லாத சக்தி.உலகத்தின் மனித ஜனத்தொகை தொடர இந்த அன்பே காரணம்.அன்பு அழியும்போது, இந்த மனிதனும் அழிவான்.
-என்னுயிர்த்தோழி.


மிதமிஞ்சிய அதிகாரம் கொடுக்கிற குழப்பம் போல, உலகத்தின் கேடான விஷயம் எதுவுமில்லை.
-என்னுயிர்த்தோழி.


மரண பயத்தை புறக்கணித்தவனுக்கு நாத்திகம் ஞான மார்க்கம். மரண பயத்தை ஏற்றுக்கொள்பவனுக்கு ஆத்திகம் நல்ல வழிகாட்டி.
-என்னுயிர்த்தோழி.


அறிவின் ஆதிக்கத்தில் ஆணவம் கிளரும்.ஆணவத்தின் அலட்டலில் அன்பு அழியும். அறிவு வளர வளர அன்பின் மதிப்பு குறைவதும், அன்பு உள்ள இடத்தில் அறிவற்று இருப்பதும் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.
-என்னுயிர்த்தோழி.


நாத்திகமும் இல்லாமல், ஆத்திகமும் இல்லாமல் இருப்பவன் வெறும் மரண பயத்தோடே வாழ்கிறான்.உலகில் ஆயுத வலிமையும், அதிகார வலிமையும், பண வலிமையும், படை வலிமையும் உடையவர்கள் இப்படி இரண்டுங்கெட்டானாகவே இருப்பார்கள்.
-என்னுயிர்த்தோழி.


எதிரே எவரோ ஒருவர் உட்கார்ந்து சொல்லித் தருவதும் அப்படி சொல்லித்தருபவர் எதிரே உட்கார்ந்து கற்றுக்கொள்வதும் எளிதான விஷயங்கள். ஆனால் வாழ்க்கை கடினமானது. கற்றுக்கொண்டதெல்லாம் மறந்துபோகின்ற சந்தர்ப்பங்களை வாழ்க்கை அடிக்கடி ஏற்படுத்தித் தரும்.
-கடலோரக்குருவிகள்.


அன்போடு அன்புமயமாக இருக்கிற விதத்தில் ஆவேசமில்லை.ஆவேசமில்லாதபோது துக்கமுமில்லை.
-கடலோரக்குருவிகள்.


நன்மை இது என்று தெரிந்திருந்தும், மிகச் சரியாய் தீதான விஷயத்தை சுவீகரித்து கொள்ளும்.மனசு மிகத் தெளிவாய் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, மிக மக்குத்தனமாய் ஒரு முடிவு எடுக்கும். கற்றுக் கொள்வதற்கு ஒரு திறமை வருவது போல, கற்றுக்கொண்டதை வாழ்க்கையில் அப்பியாசம் செய்வதற்கு ஒரு திறமை வேண்டியிருக்கிறது. அதாவது எந்த நேரமும் கற்றுக் கொண்ட பாடத்தோடேயே இருக்க வேண்டியிருக்கிறது. அப்போதுதான் பூதாகரமான பிரச்சினைகள் முளைக்கிறபோது எதிர்கொள்ள முடிகிறது.
-கடலோரக்குருவிகள்.


அக்கறை என்பது வீட்டில் மனைவியிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும்.அதுதான் சிறப்பு. அதுதான் நியாயம். பிறகுதான் குழந்தைகள் மீது படரவேண்டும்.குழந்தைகள் மீது படர்ந்த அக்கறையைப் போல உலகத்தார் மீதும் படரவேண்டும்.இவர்கள் அனைவரும் என்குழந்தைகள் என்கிற எண்ணம் வரவேண்டும்.
-ஷங்கரர் ராணியிடம்,கூடு.


அனவரதமும் என்னையே எவன் நினைத்துக்கொண்டிருக்கிறானோ, அவன் தினசரி யோகஷேமத்தை நான் கவனித்துக்கொள்கிறேன் என்பது வார்த்தைகளாகவே இருக்கும். இதை உள்வாங்கி யோசிக்க யோசிக்க உண்மை புரியும்.வார்த்தைகள் அர்த்தமாவதற்கு அனுபவம் தேவை. அந்த அனுபவத்தில் இருந்து உண்மையை கிரகித்துக்கொள்ளும் நடுநிலைமையான புத்தி தேவை.
-கடலோரக்குருவிகள்.


பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி 6

0 comments: