2:57 AM

பாலகுமாரனின் சிந்தைனகள் பகுதி 8

எதனால் மனிதருக்கு வாழ்க்கையில் சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன என்று சொல்ல முடிவதில்லை. வெற்றிக்கோ முன்னேற்றத்திற்கோ சந்தர்ப்பங்கள் எவருக்கும் ஏற்படாமல் இராது. அவை ஏற்படும்போது இது வெற்றிக்கான விஷயம் என்று தெரிவதே இல்லை.நல்ல வாய்ப்பு என்று ஒரு வேலையின் ஆரம்பம் காட்டுவதே இல்லை.
-கடலோரக்குருவிகள்.


வாழ்க்கை என்பது பிறர் பேசுவதைக் கேட்டு,நடப்பதைப் பார்த்து தன் அனுபவத்தை ஒப்பிட்டு தானாய் புரிந்து கொள்வது. எல்லாம் தெரிந்து இங்கு பிறந்தவன் எவருமில்லை. அப்படிப் பிறப்பவனை கடவுள் என்று உலகம் கொண்டாடுகின்றது. அவன் யுகத்துக்கு யுகம் அவதரிப்பான் என்று உறுதி கூறுகிறது. மற்றபடி, மனிதர்கள் அறிவுரை கேட்டு அதை அனுபவத்தில் தோய்த்து மேற் கொண்டு நடப்பவர்கள். அறிவுரையை கேட்கமாட்டேன் என்று சொல்பவன் நிர்மூடன்.சொல்லமாட்டேன் என்பவன் அகம்பாவி. இங்கே நீ கற்றதனைத்தும் பிறர் எச்சம்.பிறர் வாழ்ந்து அனுபவித்ததின் மிச்சம்.
-கடலோரக்குருவிகள்.


சொல்லிக் கொடுப்பதில் எந்த சிரமமில்லை.ஆனால் சொல்லிக் கொடுத்ததை, சொல்லிக் கொடுத்த விதத்தில் புரிந்து கொள்ளத்தான் சிரமப்பட வேண்டியிருக்கிறது. சொல்லிக் கொடுப்பவன் மீது முழு கவனமாக கற்றுக்கொள்பவன் இருக்கவேண்டியிருக்கிறது.அப்படி ஒரு கவனம் வர ஆர்வம் தேவையாய் இருக்கிறது.இந்த ஆர்வத்திற்கு அப்பால், சொல்லிக் கொடுப்பவனுக்கு விஷயம் தெரியும் என்ற நம்பிக்கை, கற்றுக்கொள்பவனுக்கு தேவைப்படுகிறது.கற்றுக்கொள்ள ஒரு நல்ல சுழ்நிலை தேவையாய் இருக்கிறது.கற்றுக்கொள்ள நல்ல நேரம் தேவைப்படுகிறது.
-கடலோரக்குருவிகள்.


உண்மையை உண்மையாகவே சொல்ல முடியாது.உண்மையை உவமையாகத்தான் சொல்ல முடியும். ஏனெனில் சத்தியத்தை விளக்குவது கடினமானது.
-அகல்விளக்கு.


ஞானம் மிக மிக முக்கியம்.நல்ல குடும்ப வாழ்க்கைக்கு நிதானம்தான் ஆணிவேர்.நிதானம் இல்லாத தன்மையால்தான் பலபேர் குடும்ப வாழ்க்கை சீரழிகின்றன.ஒருவர் மீது ஒருவருக்கு காழ்ப்பு ஏற்படுகின்றது. காழ்ப்புதான் மிகப்பெரிய மனவேதனை. தெளிவுதான் மிகப்பெரிய சந்தோசம்.
-அகல்விளக்கு.


உதவி செய்தல்தான் உறவின் துவக்கம்.அங்கே உண்மையிருப்பின் பலப்படும்.
-இனிது இனிது காதல் இனிது.


வெறுப்பில் பெண்ணுக்கு மனவலிவு மிகும்.பொங்கும் காதலில் லேசாகும். வேதனை வந்தால் ஆணுக்குத் தொய்வு வரும். சோதனைஎனில் தாங்கும் வெறி எழும். பிரிவில் பெண் பின்னமாவாள். ஆண் ஒன்றாவன். ஒருமுகப்படுவான்.
-இனிது இனிது காதல் இனிது.


திருமணம் என்கிற விஷயம் புனிதம் என்கிற வார்த்தையோடு எப்படி தொடர்பாயிற்று.சடங்கு புனிதமா. சந்தித்தது புனிதமா.சம்மதம் புனிதமா. யோசித்துப் பார்க்கையில் சந்தித்து, சம்மதமாகி, சம்மதத்தை சடங்காக்கியதே திருமணம்.சந்தித்தும், சடங்கும் செயல்கள். சம்மதம் என்பது எண்ணம்., ஓர் உணர்வு. சம்மதம் எதற்கு, எதன் பொருட்டு. வாழ்வதற்கு.திருமணச் சம்மதம் என்பது ஆணும் பெண்ணும் ஒரு கூரைக்குக் கீழ் உணர்வுகளைப் பரிமாறி வாழ்வது. எந்த உணர்வுகளை. காதல்,காமம், தாபம்,சோகம், மகிழ்வு, நல்லது, கேட்டது எல்லா உணர்வுகளையும் ஒருவருக்கு ஒருவர் பரிமாறி வாழ்வது.
-இனிது இனிது காதல் இனிது.


ஒரு வயதிலிருந்து நான்கு வயது வரை உள்ள மூன்று வருட காலம் மிக முக்கியமான காலம். ஒரு குழந்தையின் வளர்ச்சி அந்த வயதில் தான் தீர்மானிக்க படுகிறது. அந்த வயதில் நேசத்தோடும், நெறியோடும் வளர்ந்த குழந்தைக்கள் வாழ்நாளில் மிக உயர்ந்த நிலைக்கு எளிதில் வருவார்கள். உலக விசயங்களில் தெளிவாகவும், திடமாகவும் இருப்பார்கள். அங்கே தகப்பனாலும், தாயாலும் பாதிக்கப்பட்ட குழந்தைகள், வறுமையால் வாடிய குழந்தைகள், அன்புக்கு ஏங்கிய குழந்தைகள் ஜெய்ப்பது மிக கடினம்.
-தங்க கை.


என் முயற்சி ஒரு அளவிற்கே என்னை உயர்த்தும். கடவுள் என்கிற விஷயத்தின் கீழ் யார் சரணாகதி அடைகிறார்களோ, அவர்களது முயற்சி மட்டுமல்லாமல், அவர்களது முயற்சி தொடர்ந்து வளர அந்த கடவுள் சக்தி காப்பாற்றும்.
-கௌசிகர் ராமனிடம், பட்டாபிஷேகம்.


சிலருக்கு சில நேரம் மிக நல்ல வழிகாட்டி கிடைத்துவிடும்.எந்த முயற்சியும் செய்யாமல் எந்த தேடலும் நடத்தாமல் தானாய் எதிரே உதவி செய்ய ஆள் கிடைத்துவிடும்.அப்படி கிடைத்த உதவியை இழிவாக்காமல் தக்க வைத்துக்கொள்ள சாமர்த்தியம் வேண்டும். உதவியா இது என்று சந்தேகம் கொள்ளாமல் உவப்பாய் உறவாடவேண்டும்.
-கடலோரக்குருவிகள்.


உலகின் மிகச்சிறந்த மொழி மௌனம்தான்.அந்த மொழி பேசுபவர்களுக்குத்தான் அந்த மொழியின் இலக்கணங்கள் தெரிந்தவர்குத்தான் அந்த மொழியின் வளமை மிக்கவர்களுக்குத்தான் கடவுளோடு பேசமுடியும்.கடவுளோடு பேச மௌனம் ஒரு மொழி. அதுவொரு வழி.
-தோழன்.


எல்லாப் பிரிவும் அபத்தமானது. அற்பத்தனமானது. இங்குள்ள மனிதர்களின் கோபமும், குரோதமும் வேர் இல்லாதவை. வெறுமே மேல்புத்தியில் தளும்பி நிற்பவை. அண்ட பேரண்டத்தின் பிரமாண்டத்தை உணரும் பொழுது, இங்குள்ள மனிதர்கள் புழுக்களாக, புழுக்களின் புழுக்களாகத் தெரிகிறார்கள். அவர்களுக்கு கர்வம் இருப்பதும், காதல் இருப்பதும், காமம் இருப்பதும் சிரிப்பாய் இருக்கின்றன. அந்த நிலை தெரிய வந்தால் எந்தப்பிரிவும் நிலையற்றது என்று தெரியும். கற்பிதமானது என்று புரியும். அப்படிப்புரிய மறுபடி மறுபடி பிறக்கவேண்டும்.
-கர்ணனின் கதை.


காதல் என்பது ஆண் பெண் சம்பந்தப்பட்டது மட்டுமில்லை. ஒருவரிடமிருந்து சகலரிடமும் பரவ வேண்டிய உன்னத உணர்வு. அதில் ஆணுக்குப் பெண் ஓர் ஆரம்பம். ஈர்ப்பதில் ஈடுபட்டு மலர, ஈர்க்காத இடத்திலும் மலரின் வாசம் பரவும். சகலமும் நேசிக்கத் தகுந்தவையே என்பது புரியும்.
-இனிது இனிது காதல் இனிது - 2.


மனதில் அமைதி இல்லாத ஆணுக்குள் அன்பு இருக்காது.அகந்தை மட்டுமே இருக்கும்.அன்பு செய்யப்படாத, செய்யாத பெண்ணுக்குள்ளும் அவஸ்தைகள் வந்து விடும். தனிமை அவளைப் பித்தாககும். பயம் தரும். அது அடிப்படை விதி. இயற்கை விதி.
-இனிது இனிது காதல் இனிது -2.


நமது துக்கத்தை பிறரிடம் சொல்வதில் அர்த்தம் இல்லை. பாதி பேருக்கு அதில் சந்தோஷம். மீதி பேருக்கு அக்கறை இல்லை.


சூழ்நிலைக்கு ஓடுவது தோல்வி. சூழ்நிலையில் தன்னை இழப்பது மரணம். சூழ்நிலை தாக்கும்போதே யோசிப்பது யுத்தம்.


யார் கோப பட்டாலும் அதை தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பது சந்தோசம் தான். கோபம் மிருகத்தனமானது. ஒரு மனிதனிலிருந்து கோபம் வெளிப்படுகிறபோது, அவனிடமிருந்து பீறிடும் மிருகத்தனமான பார்வையும், சொல்லும், செயலும் வியப்புக்குரியன. மனிதர்களின் கோபத்தை விலகி பார்க்க வியப்பு தரும்.
-திருப்பூந்துருத்தி.


நல்ல நண்பன் மனைவியைப் போல.யாரிடம் ஒளிவு மறைவு இல்லாமல் இருக்கிறதோ அவர்கள் நெருக்கமானவர்கள். உலகில் ஒளிவு மறைவு இல்லாமல் இருக்கவேண்டிய முதல் இடம் மனைவி,அடுத்த இடம் நண்பன்.நண்பனும் மனைவியும் மெல்லிய கோட்டில்தான் பிரிவுபடுகிறார்கள்.
-கண்ணன் குசேலரிடம்- குசேலர்.


பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி 7